நாசரேத்தூர் இயேசு - 5

இயேசுவின் மூன்றாவது சோதனை


மத்தேயு 4:8-11
மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார். பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.


சாத்தான் ஆண்டவரை மலையுச்சிக்குக் கொண்டு சென்று, தன்னை வணங்கினால் உலகின் அரசாட்சியை அவருக்குக் கொடுப்பதாகச் சொன்னான். "மெசியா எனப்படுபவர் உலகம் முழுவதையும் இணைக்கும் ஓர் அரசை உருவாக்கி, சமாதானத்தையும் நல்லாட்சியையும் கொடுப்பவர்தானே? ஆகவே, சாத்தான் வழங்குவதாகச் சொன்ன அரசாட்சியை அவர் ஏற்றுக்கொண்டிருக்கலாமே?" எனும் கேள்வி நம் மனத்தில் எழலாம். இதற்கான விடையை இரண்டு இடங்களில் காணமுடியும். முதலாவது : உயிர்த்த ஆண்டவர் சீடர்களை கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்கு அழைத்துச் சென்று "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது" என்றார் (மத். 28:18). விண்ணகத்தைத் தவிர்த்த, வெறும் மண்ணுலக அதிகாரம் எளிதில் அழிந்துவிடக் கூடியது; மீட்பளிக்க இயலாதது. விண்ணக இறைவனின் நீதிக்குக் கட்டுப்பட்ட, இறை ஆசி பெற்ற அதிகாரமே உண்மையான, நிறைவான, நம்பத்தகுந்த அதிகாரம். இரண்டாவது : இயேசுவின் அதிகாரம் அவரது உயிர்த்தெழலில் இருந்து வருகிறது. கொல்கொதா மலையில், மனிதர்களால் கேலி செய்யப்பட்டு, சீடர்களால் கைவிடப்பட்ட நிலையில் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை மரணம் இல்லாமல் உயிர்த்தெழல் இல்லை. இவ்வாறு உருவான கிறிஸ்துவின் அரசு, சாத்தான் காண்பித்த இவ்வுலக அரசுகளைக் காட்டிலும் வித்தியாசமானது. உலக அரசுகளின் மேன்மை மாயையானது. விரைவில் சிதையக்கூடியது. ஆண்டவரின் அரசு, அவரது சீடர்கள் ஆக முடிவு செய்பவர்களின் பணிவிலும், மூவொரு இறைவனின் பெயரால் திருமுழுக்கு பெறுபவர்களாலும், அவரது கற்பனைகளைக் கடைபிடிப்பவர்களாலும் வளர்கிறது.


இம்மூன்றாம் சோதனை வரலாற்றில் பற்பல வடிவங்களைக் கொள்கிறது. கிறிஸ்தவப் பேரரசு துவக்கத்தில் விசுவாசத்தினால் அரசியல் ஒருமிப்பை ஏற்படுத்த முயன்றது. இதன் பின்னர், கிறிஸ்து்வ அரசு, உலகியல் ரீதியான ஒரு அரசாகவும் அரச மேன்மையைப் பெறவும் எதிர்பார்க்கப் பட்டது. உலக நோக்கில் அதிகாரம் இல்லாத விசுவாசத்திற்கும் இயேசுவுக்கும் அரசியல் பலமும் படை பலமும் கொடுக்கப்பட்டது. அதிகாரத்தினால் விசுவாசத்தைப் பாதுகாக்க நினைக்கும் இந்த சோதனை மீண்டும் மீண்டும் பற்பல வடிவங்களில் பற்பல நூற்றாண்டுகளிலும் எழுந்துள்ளது. ஆனால் மீண்டும் மீண்டும் அதிகாரம் விசுவாசத்தை மூச்சுத்திணற வைத்துவிட்டது. விசுவாசமும் அரசியல் அதிகாரமும் இணையும்போது விசுவாசம் அதிகாரத்தின் சேவகனாகி விடுகிறது. ஆகவேதான் இயேசுவின் பேரரசை உலக அரசியல் அமைப்புக்களுடன் சம்பந்தப்படுத்துவதை எதிர்த்து நூற்றாண்டு நூற்றாண்டுகளாக போராட வேண்டியிருந்தது.

இயேசுவின் பாடுகளில் இருந்து, சோதனையில் இறைப் பேரரசின் பதிலீடாக கொடுக்கப்படும் இன்னொரு தெரிவை (choice) அறியலாம். " பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன்"(மாற்கு 15:7). பரபாஸ் யூதர்கள் எதிர்பார்த்த மெசியாவின் உலகியல் அரசை கொண்டு வருவதற்காக கலகத்தில் ஈடுபட்டவர். ஆகவே அன்றைய யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட மெசியாவிற்கான தெரிவுகள் - ஆயுதம் ஏந்திப் போராடி, விடுதலை பெற்று யூதர்களின் சொந்த அரசை நிறுவுவதாகக் கூறிய பரபாஸும், தன்னை இழப்பதுவே வாழ்வின் வழி என போதிக்கும் மர்ம நபரான இயேசுவும்! யூதர்கள் பரபாஸைத் தெரிவு செய்ததில் ஆச்சரியமில்லை!

நம்மிடம் இதே தெரிவுகளைக் கொடுத்து தெரிந்தெடுக்கச் சொன்னால், நாம் இறைமகனாகிய நாசரேத்தூர் இயேசுவைத் தெரிவு செய்வோமா? இது போன்ற சோதனைகள் நேரடியாக வருவதில்லை. நம்மைச் சோதிப்பவனாகிய சாத்தான் நேரடியாகத் தன்னை வணங்குமாறு சொல்வதில்லை. அவன் நம்மிடம் திட்டமிடப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட, இறைவனை தனிப்பட்ட முறையில் மட்டும் வைத்துவிட்டு முக்கியக் காரியங்களில் அவரைக் கொண்டுவராத, ஓர் உலகை நாம் உருவாக்க வேண்டும் என்று மட்டும்தான் சொல்கிறான்!

உலகின் மீட்பராக இருப்பவரிடமிருந்து எவ்வகையான செயல்கள் எதிர்பார்க்கப் படுகின்றன என்ற கேள்வியைக் கொண்டிருப்பதால் இம்மூன்றாம் சோதனை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இயேசுவின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் இச்சோதனை வெளிப்படுகிறது. பேதுரு இயேசுவை 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' (மத். 16:16) என்று தனது விசுவாசத்தை அறிக்கையிட்ட சிறிது நேரத்திலேயே சாத்தானின் சோதனை உருவானது. ஆண்டவர் மெசியாவை இறைவாக்கினர்களின் செய்திகளின் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அதாவது, மெசியா உலகியல் அதிகாரத்தைக் கொண்டிராமல், சிலுவை மரணத்தினால் ஒரு வித்தியாசமான சமூகத்தை உருவாக்குபவர் என்றார். பேதுருவால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, ' ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது ' என்றார் (மத். 16:22). ஆகையால்தான் இயேசு பேதுருவை இவ்வாறு கடிந்து கொண்டார் - ' என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் '

பேதுருவுக்கு ஏற்பட்ட சோதனை இக்காலத்தில் நமக்கும் ஏற்படுகிறது. இப்போது கிறிஸ்தவப் பேரரசு ஒரு சோதனையல்ல. ஆனால், கிறிஸ்தவம் உலகியல் ரீதியாக முன்னேற்றத்திற்கான ஒரு தீர்வு என்று கொடுக்கப்படும் விளக்கம் சோதனைதான். அகில உலகச் செழிப்பை உருவாக்குவது குறித்து பறைசாற்றுவது மாத்திரமே கிறிஸ்தவம் மற்றும் எல்லா மதங்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று சொல்லப்படுவதும் இதே சோதனைதான். இச்சோதனை மறைமுகமாக ஒரு கேள்வியாக வருகிறது. "இயேசு சிறந்ததோர் உலகை உருவாக்க வரவில்லை என்றால், வேறு எதற்காக வந்தார்? எதனைக் கொண்டு வந்தார் ? அது மெசியாவைப் பற்றிய நம்பிக்கையின் நிறைபொருளாக எவ்வாறு அமையும்?". இதற்கான விடை "இயேசு இறைவனைக் கொண்டு வந்தார்" என்பதே. ஆபிரகாம், மோசே, இறைவாகினர்கள் வழியாக இஸ்ராயேல் மக்களிடையே வெளிப்படுத்தப்பட்ட இறைவன் இயேசுவின் வழியாக உலகினர் அனைவருக்கும் வெளிப்படுத்தப்பட்டார். இறைவனுடன், நமது துவக்கம், முடிவு ஆகியவற்றைப் பற்றிய உண்மைகளையும், விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவற்றையும் கொண்டு வந்தார். இவை மிகக் குறைவே எனும் எண்ணம் நமது மனங்கள் கடினப்பட்டிருப்பதால்தான் வருகிறது. இறைவனின் சக்தியும் அதிகாரமும் இவ்வுலகில் மிகவும் அமைதியாகச் செயல்படுகிறது. ஆனால் உண்மையான, என்றும் நிலைக்கும் அதிகாரமும் சக்தியும் அதுவே. உலக அரசுகள் இங்கு வாழும் மனிதர்களின் அரசுகளாகவே இருக்கின்றன. இவ்வுலகை ஓர் மிகச்சரியான உலகமாக (perfect world) மாற்றப் போகிறேன் என்று சொல்லும் எவனும் சாத்தானைப் போல பொய்யனே. அவன் உலகைத் தன் கைகளிலிட்டு விளையாடுகிறான்.

சோதனையின் போது சாத்தான் காண்பித்த உலக அரசுகள் யாவும் அழிந்துவிட்டன. அவற்றின் மாயையான புகழ் வெறும் ஒரு தோற்றமாகவே அமைந்தது. ஆனால், கிறிஸ்துவின் அடக்கமான, தியாக அன்பினால் உருவான புகழ் இன்றும் நிலை நிற்கிறது; என்றும் நிலை நிற்கும்.

(இப்பதிவு பாப்பரசர் பதினாறாம் பெனடிக்டின் புத்தகத்தை வாசித்தபோது குறித்துக்கொண்ட சில கருத்துக்களின் தொகுப்பு)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதன் பொருள்

பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய "நாசரேத்தூர் இயேசு" - புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 2

இயேசு சோதிக்கப்படல் - நாசரேத்தூர் இயேசு - பாகம் 3