இயேசு சோதிக்கப்படல் - நாசரேத்தூர் இயேசு - பாகம் 3

    (பாப்பரசர் பதினாறாம் பெனடிக்டின் புத்தகத்தை வாசித்தபோது குறித்துக்கொண்ட சில கருத்துக்களின் தமிழாக்கம்)

மெசியா அல்லது கிறிஸ்து என்பதன் பொருள்

மெசியா அல்லது கிறிஸ்து என்றால் அபிஷேகம் (திருப்பொழிவு) செய்யப்பட்டவர் என்று பொருள்.

ஏசாயா 11:1,2 சொல்வதாவது:- ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்: அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். ஆகவே, திருப்பொழிவு என்றால் ஆண்டவரின் ஆவி ஒருவர் மேல் இறங்கித் தங்குதல் என்று பொருள்.


இயேசு செபக்கூடத்தில் இதனையே இவ்வாறு குறிப்பிடுகிறார் :- லூக்கா 4:18 18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்'. இயேசுவின் திருமுழுக்கு நிகழ்ச்சி அவர் எவ்வாறு திருப்பொழிவைப் பெற்றார் என்பதைக் குறிக்கிறது.



தூய ஆவியின் கட்டளை

இயேசு சோதிக்கப்பட்டது தூய ஆவியின் கட்டளையினால்தான். மத்தேயு 4:1 கூறுவதாவது :- அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். சோதனை என்பது ஒரு மனப்போராட்டம். செய்யவேண்டிய வேலையைத் திரித்து, வேலை முடிந்து விட்டதைப்போல காண்பிக்கப்படுவதை எதிர்த்து நடக்கும் போராட்டம்.


இயேசு செய்து முடிக்க வேண்டிய வேலை, மனித வாழ்வு எனும் நாடகத்தில் இணைந்து அதன் ஆழ் நிலைகளுக்கும் சென்று, காணாமல்ப் போன ஆடுகளைக் கண்டுபிடித்து, தோளிலிட்டு,வீட்டுக்கு அழைத்து வருவதாகும். மனித வாழ்வின் எல்லா இடர்களையும் ஆபத்துகளையும் அனுபவிப்பதும் அவரது வேலையின் ஒரு அம்சமாகும். இதையே எபிரேயர் 2:17-18 சொல்கிறது : ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதர் சகோதரிகளைப்போல் ஆக வேண்டிதாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர். மேலும் எபிரேயர் 4:15 சொல்வதாவது : ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல: மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்: எனினும் பாவம் செய்யாதவர்.

சோதனைகளின் மையக்கருத்து

மத்தேயுவும் லூக்காவும் மூன்று சோதனைகளை குறிப்பிடுகிறார்கள். மனித வாழ்வுக்கு முக்கியமானவை எவை என்பதையும், இயேசுவின் பணி குறித்த அவரது மனப்போரட்டத்தையும் இச்சோதனைகள் விவரிக்கின்றன.


இம்மூன்று சோதனைகளின் மையமாக இருப்பது கடவுளை இரண்டாம் நிலைப் படுத்தி புறந்தள்ளிவிட்டு, வெகு முக்கியமானதாக நாம் கருதும் உலகியல் காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் செயல்கள். கடவுளுக்குச் சம்பந்தமில்லாததாக நாமாக ஒரு உலகை ஏற்படுத்தி, அரசியலுக்கும் பொருள்முதல்வாதத்திற்கும் (materialism) அப்பாற்பட்டவற்றை ஒப்புக்கொள்ளாமலும் கடவுளை நம்புதற்கரியவராகவும் கொள்வதே, நம்மைப் பலவகைகளிலும் பயமுறுத்தும் சோதனையாகும்.


நல்லொழுக்க நிலைப்பாடு (moral posturing) சோதனையின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. சோதிப்பவன் நேரடியாகத் தீமையைச் செய்யச் சொன்னால் சோதிக்கப்படுபவனுக்கு எளிதில் அதன் நோக்கம் புரிந்துவிடும். ஆகையால், நேரடியாக தீமையைச் செய்யச் சொல்லாமல் வேறு ஒரு சிறந்த வழியைக் காண்பிப்பதாக சோதிப்பவன் பாசாங்கு செய்கிறான். அவன் காட்டும் சிறந்த வழியில் சென்றால், எல்லாவிதமான மனப்பிராந்திகளையும் விட்டுவிட்டு, இவ்வுலகை நல்லதோர் வாழ்விடமாக ஆக்கும் வேலையைச் செய்ய ஆயத்தப்படுத்துவதாகச் சொல்கிறான். மேலும், உண்மை நிலைக்காக (true realism) வாதிடுவதாகச் சொல்கிறான். நம் முன்னால் காணப்படுகின்ற அதிகாரமையமும் உணவும் தான் உண்மைநிலையென்றும் இறைவனைப் பற்றியவை இரண்டாம் பட்ச, பொய்யான, யாருக்கும் தேவையில்லாத சங்கதிகள் என்றும் வாதிடுகிறான்.

இறைவன் என்பவர் உண்மையாகவே இருக்கின்றாரா, யதார்த்தத்தில் இறைவனைக் காணமுடிகின்றதா அல்லது இறைவன் பொய்யானவரா ? இறைவன் நல்லவரா (நல்லவற்றைச் செய்கிறாரா) அல்லது நாமாகத்தான் நல்லவற்றைக் கண்டுபிடித்துச் செய்ய வேண்டுமா? இதுபோன்ற இறைவனைப் பற்றிய கேள்விகள் மனித வாழ்வின் அடிப்படைக் கேள்விகளாக அமைகின்றன. இவ்வுலகின் மீட்பராக இருப்பவர் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக் கூடாது? இயேசுவின் சோதனைகள் இக்கேள்விகளைப் பற்றியவையே.

முதலாவது சோதனை

முதலாவது சோதனை பற்றி மத்தேயு 4:2 சொல்கிறது : அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் ' என்றான். இயேசுவின் சிலுவையின் அடியில் நின்று பரிகாசம் செய்தவர்களும் இதுபோன்ற கேள்வியையே கேட்டார்கள். மத். 27:40 - நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா ' என்று அவரைப் பழித்துரைத்தார்கள். முன்பாகவே ஞான ஆகமத்தில்(2:18) இதைப்பற்றி எழுதப்பட்டுள்ளது : "நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்: பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார்". கிறிஸ்து தம்மைப் பற்றி கூறியவற்றை நிரூபிக்க சில நிரூபணங்களைச் செய்யவேண்டும் என்று சவால் விடப்பட்டார். இந்த நிரூபணக் கோரிக்கையை மீண்டும் மீண்டும் மற்றவர்கள் இடுவதை இயேசுவின் வாழ்வில் நாம் காணலாம். இயேசு செய்த எல்லா அற்புதங்களைக் காட்டிலும் மிகப்பெரிய ஒரு அற்புதத்தைச் செய்து அவர் யார் என்பதை எல்லோருக்கும் தெள்ளத்தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதான கோரிக்கை அது.

இதுபோன்ற கோரிக்கையைத்தான் நாமும் இறைவனுக்கும், கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் காலம்காலமாக வைக்கிறோம். "இறைவா! நீர் உண்மையாகவே இருக்கிறீர் என்றால், உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தும். கிறிஸ்துவே ! நீர் வரலாற்றில் அவ்வப்போது தோன்றும் மகான்களில் ஒருவர் அல்லாமல், உண்மையிலேயே இறைவனின் மகனானால், தற்போது செய்வதைப் போலல்லாமல் தெள்ளத்தெளிவாக எங்களுக்கு நிரூபித்துக் காட்டும். திருச்சபை உம்முடையதானால், இப்போது இருப்பதைக் காட்டிலும் எளிதாக விளங்கும்படியாகச் செய்யும்" என்றவாறு அமைகிறது நமது கோரிக்கை.

இயேசுவின் இறைத்தன்மையை நிரூபிக்க முதலாவது சோதனையில் இடப்பட்ட கோரிக்கை கற்களை ரொட்டியாக மாற்றவேண்டும் என்பது. இச்சோதனைக்கு அடிப்படையாக இருந்தது இயேசு பசியாக இருந்தது. இயேசு வாழும் காலத்திலும் பின்பு வரலாற்றிலும் அவ்வப்போது பசி பற்றிய சோதனை அவரை எதிர்கொண்டது. இறைவன் இருக்கின்றார் என்றும், மனுக்குல மீட்பர் இருக்கின்றார் என்றும் சொல்லப்படும் நம்பிக்கைக்குச் சவால் விடுவதற்கு உலக மக்களின் பசி, பட்டினியைக் காட்டிலும் மேலானதொன்று இருக்கிறதா? முதன்முதலில் மானிட மீட்பர், உலகினர் அனைவரின் கண்முன்பில் அனைவருக்கும் ரொட்டியைக் கொடுத்து எல்லாப் பசியையும் போக்கியிருக்கலாமல்லவா? பாலைவனத்தில் அலைந்து திரிந்த நாட்களில் இறைவன் இஸ்ராயேலருக்கு மன்னா எனும் உணவை அளித்தார். மெசியா வரும்பொழுது இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் என்று அக்காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே, உலகின் மீட்பர் என்பவர் அப்போதும் இப்போதும் உலகினருக்கு உணவளித்திருக்க வேண்டுமல்லவா? உலகோருக்கு உணவளிக்கும் பிரச்சினை பிரதானமான சமூகப் பிரச்சினையல்லவா? இதைக் கொண்டுதானே மனிதரின் மீட்பு என்பதை அளவிட இயலும்? இதைச் செய்யாதவரை மீட்பர் என்று எவ்வாறு அழைப்பது? மார்க்ஸிஸம் இதனையே தனது மீட்பின் உறுதிமொழியாகக் குறிப்பிடுகிறது - எவரையும் பசியாயிருக்க அனுமதியோம் என்றும் "பாலைவனம் உணவாக மாறும்" என்றும் அதன் கொள்கைகள் சொல்கின்றன.

மேற்சொன்ன சவால்கள் திருச்சபையை நோக்கியும் விடப்படுகின்றன. "உங்களது திருச்சபை இறைவனது என்றால், உலகினர் எல்லோருக்கும் உணவு கிடைக்கும் படியாகச் செய்யுங்கள்". இதுபோன்ற சவால்களுக்குப் பதில் அளிப்பது வெகு கடினம். ஏனென்றால், பசியுற்றோரின் அழுகுரல் காதுகளைத் துளைத்து, ஆன்மாவையும் துளைக்கின்றது; துளைக்கவும் வேண்டும்.

இயேசுவின் பதிலான "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் ' என மறைநூலில் எழுதியுள்ளதே" (மத் 4:4) , இச்சோதனையால் மாத்திரம் உணரப்படுவதல்ல. இதன் பொருள் நற்செய்தி முழுவதும் பரவிக்கிடக்கிறது.

இயேசுவின் வாழ்வில் அப்பம் (ரொட்டி) பற்றி இன்னும் இரண்டு இடங்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டாவதான நிகழ்ச்சி, ஆண்டவரைப் பின்தொடர்ந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு அப்பம் பலுகச் செய்து உணவளித்தது. முதலாவது சோதனையின் போது மறுத்த காரியத்தை, இந்நிகழ்ச்சியின்போது ஏன் கிறிஸ்து செய்தார்? ஏனென்றால், அக்கூட்டத்தினர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்காக வந்தனர். அம்மக்கள் தங்கள் இதயத்தை இறைவனுக்கும் தங்களுள் ஒவ்வொருவருக்கும் திறந்து விட்டனர். ஆகவே ஆண்டவர் அருளிய அப்பத்தை வாங்குவதற்கு தங்களை தயார்ப்படுத்திய நிலையில் இருந்தனர். இந்நிகழ்ச்சியின் முக்கியக் கூறுகள் :

  • இறைவனையும், அவரது வார்த்தைகளையும், வாழ்க்கையை சரியான பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டிய படிப்பினையையும் நோக்கிய தேடல்.
  • இறைவன் உணவளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுதல்.
  • மற்றவர்களுடன் பங்கிட்டுக்கொள்வதற்குத் தயாரான நிலை.
  • இயேசு மனிதர்களின் பசியையும், உடலியல் தேவைகளையும் கண்டும் காணாமல் இருக்கவில்லை. ஆனால் அவர் இவற்றை அவற்றிற்குரிய சரியான வரிசையிலும் சரியான சூழலிலும் வைக்கிறார்.

அப்பத்தைக் குறித்த மூன்றாவது நிகழ்ச்சி - இறுதி இராவுணவு. இதுவே திருச்சபையின் நற்கருணையாகவும், இயேசுவின் இடைவிடா அப்பத்தின் அற்புதமாகவும் இருக்கிறது. இயேசு தாமே மண்ணில் விழுந்து மடிந்து, பின் பெரும் பயனளித்த கோதுமை மணியானார். அவரே நமக்காக அப்பமாக மாறினார்; காலம் நிறைவேறும் அளவும் தீராமல் பல்கிப்பெருகும் அப்பமாகிறார். இந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது இயேசு இணைச்சட்டம் 8:3 -ல் இருந்து "மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் " என்று சோதிப்பவனிடம் சொல்வது எதைக்குறிக்கிறது என்று புரிகிறது. இதையே நாஜிகளால் கொல்லப்பட்ட இயேசுசபைக் குரு ஆல்ஃப்ரட் டெல்ப் "அப்பம் முக்கியம், விடுதலை அதைவிட முக்கியம், ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியம் முறிவுபடாத விசுவாசமும் உண்மையான ஆராதனையும்தான்" என்கிறார்.

இப்படியான இறைவனை முதன்மைப்படுத்தும் வரிசையைப் பின்பற்றாமல் தலைகீழாக எடுத்துக்கொண்டால், நடப்பது அநியாயங்களும், மனிதர்களின் துன்பங்களும்தான். இறைவனை இரண்டாம் பட்சமாகவோ, மிக முக்கியமானவற்றுக்காக தற்காலிகமாக அல்லது முழுமையாக விட்டுவிடலாம் என்று கருதி காரியங்களைச் செய்யும்போது, மிகமுக்கியமானவை என்று கருதப்படுபவை ஒன்றும் இல்லாமையாக மாறுகின்றது. மார்க்ஸிஸ்டுகளின் தோல்வி மட்டுமே இதற்கு உதாரணம் அல்ல. மேற்கத்திய நாடுகள் வளரும் நாடுகளுக்கு அளிக்கும் உதவிகள் தொழில்நுட்ப, பொருள் அடிப்படையிலானவை. இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருப்பதுடன், மனிதர்களை இறைவனிடம் இருந்து விலகச் செய்வதுமாகவும் இருக்கின்றன. "மூன்றாம் உலகம்" என்ற சொல்லால் இப்போது அறியப்படும் நாடுகளை அந்நிலைக்கு மாற்றியது இப்படியான உதவிகளே. இவ்வுதவிகள் அந்நாடுகளின் மதரீதியான நெறிகளையும், நன்னடத்தை நெறிகளையும், சமுதாய அமைப்புகளையும் புறந்தள்ளிவிட்டு, வெறுமனே தொழில்சார்ந்த மன நிலையினை அம்மக்களிடையே பரப்பின. கல்லை உணவாக்க வேண்டும் என்ற கருத்தில் துவங்கப்பட்ட உதவி பின்னர் உணவுக்குப் பதிலாக கல்மனங்களைக் கொடுத்தது. இறைவனை முதன்மைப்படுத்தாதலேயே இந்நிலை. மனித மனம் நல்லதாக இல்லையென்றால் மற்ற எதுவும் நல்லதாக மாறாது. நல்ல மனித மனம், நல்லவரும் நன்மையுமான இறைவனிடம் இருந்தே வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதன் பொருள்

பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய "நாசரேத்தூர் இயேசு" - புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 2