பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய "நாசரேத்தூர் இயேசு" - புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 2



இயேசுவின் திருமுழுக்கு


இந்த அத்தியாயத்தில் இயேசுவின் திருமுழுக்கு பற்றி விவிலியத்தில் காணப்படும் விவரங்களை பாப்பரசர் பெனடிக்ட் XVI அலசி ஆராய்கின்றார். இயேசுவின் திருமுழுக்கினை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், இதற்கும் இறைமக்களின் திருமுழுக்கிற்கும் என்ன தொடர்பு என்பதையும் விளக்குகிறார்.


காலகட்டமும் காலத்தவர்களும்

இயேசுவின் திருமுழுக்கு பற்றி மத்தேயு நற்செய்தியிலும் லூக்கா நற்செய்தியிலும் எழுதப்பட்டுள்ளது. லூக்கா இந்நிகழ்வு வரலாற்றில் எப்பொழுது நடந்தது என நாம் எளிதாக அநுமானிக்கும்வண்ணம் கால ஆதாரங்களையும் காட்டுகின்றார். லூக்கா 3:1-2 சொல்வதாவது :
திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். 2 அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். ஆகவே இயேசுவின் திருமுழுக்கும் பிற நிகழ்ச்சிகளும் ஏதோ ஒரு புராண காலத்தில் நடந்தவைஅல்ல. என்று நடந்தது என்பதை மிகச் சரியாக கணக்கிட்டு கூறவியலும் வரலாற்று நிகழ்ச்சிகள்.
இயேசுவின் காலத்தவர்கள் :
  • சீசர் : இயேசுவும் சீசரும் நிதர்சனத்தின் இருவேறு பக்கங்களைக் குறிக்கின்றனர். ஒன்று இருந்தால் மற்றது இல்லை என்ற வகையில் இல்லாவிட்டாலும், பேரரசு தன்னை தெய்வீகத்தன்மை உடையதாகக் கருதும்பொழுது, கிறிஸ்தவம் "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குக் கீழ்ப்படியச்" சொல்கிறது (திருத்தூதர் 5:29).


  • பொந்தியு பிலாத்து : நற்செய்தியாளர் லூக்கா பொந்தியு பிலாத்து, ஏரோது, அன்னா, கயபா ஆகியோரை இங்கே குறிப்பிடுவதன் காரணம் இயேசுவின் சிலுவை நிழலை அவரது வெளியரங்க செயல்பாடுகளின் துவக்கத்தில் பதிப்பதற்காகத் தான்.


  • இஸ்ரேலில் அப்பொழுது கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. நம்மிடையே இறைவாக்கினர் எவரும் இல்லை; கடவுள் நம்மை கைவிட்டுவிட்டார் என்ற புலம்பலும் அக்காலத்தில் நிலவின. இந்நிலையில் சில புரட்சியாளர்கள் தோன்றினர்; ஆயினும் பின்னர் அவர்கள் உரோமானியர்களால் ஒடுக்கப்பட்டனர். இயேசுவின் சீடரான "தீவிரவாதி சீமோன்" மற்றும் யூதாஸ் இஸ்காரியோத்து ஆகியோரும் இதுபோன்ற புரட்சி இயக்கங்களில் பங்கு கொண்டவர்களாக இருந்திருக்கலாம்.


  • யூத சட்டப்புத்தகத்தின்படி வாழ முயற்சித்த பரிசேயர்கள், யூத மதத்தைக் காலத்திற்கேற்ப மாற்றியமைத்து வாழ நினைத்த சதுசேயர்கள் ஆகியோரும் அக்காலத்தில் வாழ்ந்தனர். யெருசலேம் அழிக்கப்பட்டபின் சதுசேயர்கள் மறைந்து விட்டனர். ஆனால் பரிசேயர்களின் வாழ்க்கை முறை பிற்காலத்தில் தோன்றிய மிஷ்னா, தல்மூட் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட யூத மதத்தினரால் பின்பற்றப்பட்டது.


  • இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கம்ரான் குகைப் புத்தகங்கள், இயேசுவின் காலத்திலோ அல்லது அதற்கு சற்று முன்போ வாழ்ந்த எஸ்ஸீன் என்ற சமூகத்தைச் சார்ந்தவை என சில வல்லுனர்கள் கூறுகின்றனர். எஸ்ஸீன் சமூகத்தவர்கள் ஏரோதினால் கட்டப்பட்ட எருசலேம் தேவாலயத்தில் வழிபடுவதைப் புறக்கணித்து, யூதேயாவின் பாலைவனங்களில் வாழ்ந்து வந்தார்கள். திருமுழுக்கு யோவான் இந்த எஸ்ஸீன் சமூகத்தில் சிறிது காலம் வாழ்ந்திருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.

திருமுழுக்கு யோவான்



யோவான் வழங்கிய திருமுழுக்கு அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த சுத்திகரிப்புச் சடங்குகளைப் போன்றதல்ல. இது மீண்டும் செய்யப்பட இயலாதது; மனமாற்றத்தை உறுதிப்படுத்தி புதுவாழ்வுக்கு வ்ழிவகுப்பதாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இது கடவுளின் நீதியைப் பறைசாற்றுவதாகவும், யோவானை விடப் பெரியவர் ஒருவர் வருவதை அறிவிப்பதாகவும் இருந்தது. நான்கு நற்செய்திப் புத்தகங்களும் யோவானின் திருப்பணியை ஏசாயா 40:3 வசனத்தைக் கொண்டு குறிப்பிடுகின்றன. "குரலொளி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்." இவ்வசனமும், இதுபோல் பழைய ஏற்பாட்டிலிருந்து எடுத்தாளப்பட்ட பிற வசனங்களும் கடவுள் தம் மறைந்த தன்மையிலிருந்து வெளிப்பட்டு நீதி தீர்ப்பிடவும் காப்பாற்றவும் வருகிறார் எனப் பகர்கின்றன; இக்கடவுளுக்கே (மன) வாயிலைத் திறக்கவும் பாதையை ஆயத்தப்படுத்தவும் வேண்டும் என்கின்றன. இவற்றினடிப்படையிலேயே யோவான் "மாபெரும் செயல்கள் நடக்கப் போகின்றன" என அறவுரைத்தார்.

யோவானின் திருமுழுக்கு பாவங்களை அறிக்கையிடுவதையும் உள்ளடக்கியது. அக்கால யூத மதத்தில் பாவங்களை அறிக்கையிடுவது என்பது வழக்கமான ஒரு சடங்குதான். இதன் குறிக்கோள் உண்மையாகவே இதுவரை வாழ்ந்த பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய, மாற்றமடைந்த வாழ்வைத் துவங்குவது. திருமுழுக்குச் சடங்கு இதனைப் பிரதிபலிக்கிறது. தண்ணீரில் மூழ்குவது சாவைக் குறிக்கிறது. ஆற்றில் ஓடும் தண்ணீர் வாழ்வைக் குறிக்கிறது. ஆற்றில் மூழ்கி எழும்போது உடலின் அழுக்குகளைக் களைந்து புத்துணர்ச்சி பெறுவதுபோல, இத்திருமுழுக்குச் சடங்கில் பழைய பாவ வாழ்வை விட்டுவிட்டு புதுவாழ்வை துவங்குவதை - மறுபிறப்பைக் குறிக்கிறது.

இயேசுவின் திருமுழுக்கு


"அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்" (மாற்கு 1:9). இயேசு, தானும் திருமுழுக்கு பெறவேண்டும் என்று யோர்தானின் கரையில் காத்திருக்கும் பாவிகளின் கூட்டத்தில் கலந்தார். எல்லோரும் பாவ அறிக்கை செய்தது போல இயேசுவும் செய்து புது வாழ்க்கை துவங்க வேண்டுமா என்ற கேள்வி கிறிஸ்தவர்களின் மனத்தில் எழலாம். இதே கேள்விதான் யோவானை ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்? ' (மத்தேயு 3:14) என்று கூற வைத்தது. அதற்கு இயேசு ' இப்பொழுது விட்டுவிடும். நேர்மையானவற்றை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' (மத். 3:15) என்று பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார். இயேசுவின் காலத்தில் "நேர்மையானவை" என்றால் சட்டப் புத்தகங்களில் (Torah) எழுதப்பட்டுள்ளபடி நடப்பது; அதாவது கடவுளின் விருப்பத்தை முழுவதுமாக ஏற்று, இறையரசின் நுகத்தைச் (பாரம் - yoke) சுமப்பது. இயேசுவின் இப்பதில் அவர் கடவுளின் விருப்பத்திற்கு முற்றிலுமாக இணங்கினார் என்பதை உணர்த்துகின்றது. யோர்தான் நதியில் இறங்கும் செயல் குற்றத்தை ஒப்புக்கொண்டு, புதுவாழ்வு துவங்கும்விதமாக அதற்காக மன்னிப்பு வேண்டுவதாகும். ஆகவே இயேசு அவ்வாறு நதியில் இறங்கிய பொழுது, மனுக்குலத்தின் எல்லாக் குற்றங்களையும் தம் தோளில் சுமந்துகொண்டார். ஆதலால், இயேசுவின் திருமுழுக்கு மனுக்குலத்தின் பாவங்களுக்காக அவர் சாவை ஏற்றுக்கொண்டார் என்பதைக் குறிக்கிறது. "என் அன்பார்ந்த மைந்தர் இவரே" என்று அப்பொழுது ஒலித்த குரலொலி, இயேசுவின் உயிர்த்தெழலைக் குறிக்கிறது. இறைமக்களாகிய நாம் திருமுழுக்குப் பெறுவதானது, இயேசு எங்கே தம்மை மனுக்குலத்தின் அடையாளமாக்கினாரோ, அங்கே சென்று நமது அடையாளத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வதாகும்.

இயேசுவின் திருமுழுக்கும் கீழைத்திருச்சபையும்


கீழைத்திருச்சபை இயேசுவின் திருமுழுக்கினைக் குறித்து அதிகமாக ஆராய்ந்து ஆழமாக புரிந்துகொண்டுள்ளமை அதன் வழிபாடுகளிலும் திருஉருவ இறையியலிலும் வெளிப்படுகிறது. ஆகவேதான் எபிஃபேனி (வானத்திலிருந்து அசரீரி இயேசுவை இறைமகன் என்று அழைத்ததைக் கொண்டாடும் விழா) திருவிழாவுக்கும் உயிர்ப்புத் திருவிழாவிற்கும் ஆழமான தொடர்பைக் காண்கிறது. மேலும் இயேசுவின் திருமுழுக்குக் குறித்த திருப்படத்தில் தண்ணீர் திரவ வடிவிலான இருண்ட கல்லறைக் குகையாக - பாதாளமாக - காண்பிக்கப்படுகிறது. இயேசு இந்த திரவக் கல்லறையில் மூழ்கியதும் நரகம் அவரை எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்துகொள்வதாக காட்டப்படுவது, அவர் பாதாளத்திற்குள் இறங்கினார் என்பதைக் குறிப்பதாகும். "அவர் தண்ணீருக்குள் சென்றபோது வலிமையுடையவனைக் கட்டிப் போட்டார்" என்று எருசலேமின் சிறில் சொல்கிறார். ஆகவே இயேசுவின் திருமுழுக்கு அவர் தீயவனாகிய வலிமையுடையவனின் வீட்டிற்கு இறங்கிச் சென்று, சண்டையிட்டு அவனைக் கட்டிப்போட்ட நிகழ்ச்சியாகும் (லூக் 11:22).


இவ்விளக்கம் நம்மை விவிலியதிலிருந்து தூரமாகக் கொண்டுசென்றுவிட்டதா ? யோவான் 1:29 ல் சொல்லப்பட்டுள்ளதாவது : மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்' . இயேசு கடவுளின் ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்படக் காரணம் என்ன ? திருமுழுக்காளரின் வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் சில குறியீடுகளை சுட்டிக்காட்டுகின்றன. ஏசயா 53:7 அவர் ஒடுக்கப்பட்டார்: சிறுமைப்படுத்தப்பட்டார்: ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை: அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். இயேசு பாஸ்கா திருவிழாவின் போது சிலுவையில் அறையப்பட்டார். அந்நிகழ்ச்சியிலிருந்து அவரே உண்மையான பாஸ்கா ஆட்டுக்குட்டியாகிறார். எகிப்திய சாவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, உறுதியளிக்கப்பட்ட விடுதலையை நோக்கிய பயணத்திற்கு பாஸ்கா ஆட்டுக்குட்டி எப்படி முக்கியமாக இருந்ததோ அதுபோல இயேசுவாகிய பாஸ்கா ஆட்டுக்குட்டி மனுக்குலத்தின் உண்மையான விடுதலையை நோக்கிய பயணத்திற்கு முக்கியமாகிறார்.


பரிசுத்த ஆவியின் வருகை


மத்தேயு 3:16 சொல்வது: இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே சொர்க்கம்* திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். 17 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. இந்நிகழ்ச்சியால் சொல்லப்படும் மூன்று கருத்துக்களாவன :



  1. சொர்க்கம் திறக்கும் காட்சி : இயேசுவின் விருப்பமும் கடவுளாம் தந்தையின் விருப்பமும் ஒன்றாக இருந்ததுதும், நேர்மையானவற்றை அனைத்தையும் இயேசு நிறைவேற்றியதும் சொர்க்கம் திறப்பதற்கான காரணங்கள். ஏனென்றால் சொர்க்கத்தில்தான் கடவுளின் விருப்பம் முற்றிலுமாக நிறைவேற்றப்படுகின்றன.

  2. இயேசுவின் பணியினைக் குறித்து தந்தையாம் கடவுளின் அறிக்கை : இவ்வறிக்கை இயேசு யார் எனச் சொல்கிறது.

  3. திரித்துவம் : தந்தையாம் கடவுள், மகன் ஆகியோருடன் தூய ஆவியும் இக்காட்சியில் காணப்படுகிறார். இயேசு உயிர்த்தெழுந்தபின் கூறினார் : "எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' . சீடர்கள் வழங்கிய திருமுழுக்கு இயேசுவின் திருமுழுக்கிற்கு செல்வதற்கான நுழைவாயில். அதுவே கிறிஸ்தவனாவதன் வழி.

தாராளமயவாதிகளின் வாதம்


தாராளமயவாதிகள் இயேசுவின் திருமுழுக்கினை பணி நிமித்தமான ஒரு அனுபவம் என கருதுகின்றனர். அதுவரை கடவுளுக்கும் தமக்கும் உள்ள தொடர்பை அறியாத இயேசு, திருமுழுக்கு அனுபவத்தின் பின் மாற்றம் அடைந்ததாகவும், அக்கால யூதர்கள் மெசியாவை எதிர்நோக்கி இருந்த சூழலில் யோவானின் பேச்சுக்களாலும், திருமுழுக்கு நிகழ்ச்சியினால் ஏற்பட்ட உணர்ச்சிவசப்பாட்டாலும் இயேசு தம் கடவுளைப் பற்றி அறிந்துகொண்டார் என்கின்றனர். ஆனால் இவர்களின் விவாதங்கள் விவிலிய வார்த்தைகளைப் பிரதிபலிக்காமல் கற்பனையுலகிலிருந்து செய்திகளைச் சொல்வதாக இருக்கின்றது. விவிலியம் சொல்லுகின்ற இயேசு அவ்வப்போது உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து, சில சமயம் வெற்றியும் சில சமயம் தோல்வியும் அடையும் ஒரு மனித நிபுணர் அல்லர். அவ்வாறாக இருந்திருந்தால் பழங்காலத்தில் வாழ்ந்திருந்த ஒரு தனி நபராக நம்மிடம் எந்த தொடர்பும் இல்லாதவராகியிருப்பார். ஆனால் நம் முன்னால் அவர் "அன்பார்ந்த மகனாக" நிற்கிறார். ஒரு பக்கத்தில் முற்றிலும் வேறானவராக இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் நம் கால மனிதராக இருக்கிறார்; நம் ஒவ்வொருவருக்கிடையே உள்ள நெருக்கத்தைக் காட்டிலும் ந்மக்கு அதிக நெருக்கமானவராக இருக்கின்றார். (அகஸ்டினார்)


பின்குறிப்பு (இது என் கருத்து) :
* விவிலிய மொழிபெயர்ப்பில் heavens என்பதை "வானம்" என்று மொழி பெயெர்த்திருக்கிறார்கள். எபிரேய மொழியில் எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும்கூட Sky என்பதற்கும் Heavens என்பதற்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். பௌதிகவியலாளர்கள் multiple dimensions, multiple universe, dark matter, dark energy என்றெல்லாம் புதிது புதிதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இக்காலத்தி்லும்
Heavens என்பதை வானம் என்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவேதான் அதை சொர்க்கம் என்று எழுதியிருக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதன் பொருள்

இயேசு சோதிக்கப்படல் - நாசரேத்தூர் இயேசு - பாகம் 3