நாசரேத்தூர் இயேசு - 4




(பாப்பரசர் பதினாறாம் பெனடிக்டின் புத்தகத்தை வாசித்தபோது குறித்துக்கொண்ட சில கருத்துக்களின் தமிழாக்கம்)


இறைவனைக் குறித்து சிலர் கேட்கலாம் - "ஏன் இறைவன் தான் இரு்ப்பது எல்லோருக்கும் தெரியும்படியாக செய்யவில்லை ? இயேசுக் கிறிஸ்து தான் இருப்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளுமாறு அறிகுறி ஒன்றை விட்டுவிட்டுச் சென்றிருக்கலாமே ?". இது இறைவனையும் மனிதனையும் பற்றிய புரிந்துகொள்ளக் கடினமான ரகசியம். உலகில் இறைவன் நேரடியாக காணமுடியாதவராக இருந்தாலும், மனிதரின் மனம் தேடும்போது கண்டுபிடிக்கத் தக்கவராக இருக்கிறார். இத்தகைய உலகில்தான், போலித் தத்துவங்களால் உருவாகும் மாயையை எதிர்க்கவும், மனிதன் உணவினால் மட்டுமில்லாமல் இறைவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிவதாலும் உயிர்வாழ்கிறான் என்பதை உணரவும் நாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம்.


இரண்டாவது சோதனை


மத்தேயு 4:5-7

பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் ″ எனவும் எழுதியுள்ளதே ' என்று சொன்னார்.


இயேசுவின் இரண்டாவது சோதனையில், சாத்தான், சங்கீதப் புத்தகத்தில் இருந்து சில வசனங்களை (சங். 91:11,12) மேற்கோள் காட்டுகிறான். "நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்" என்று கூறும் இவ்வரிகள் இறைவனை நம்பும் மனிதனுக்கு அவர் அளிக்கும் பாதுகாப்பைப் பற்றிக் கூறுகின்றது. அதுவும், புனிதமான, இறைவனின் ஆலயமான எருசலேம் தேவாலயத்தில் இந்த வசனங்களைச் சொல்வதால், இறைவனிடம் பாதுகாப்பு வேண்டி மனிதன் செபிப்பதைப்போல் ஆகிறது. இதிலிருந்து முதலாவதாக நாம் அறிந்து கொள்ளவேண்டியது, சாத்தான் மனிதரைச் சோதனையில் இடறும் படியாக விவிலியத்திலிருந்து வார்த்தைகளைச் சொல்லும் ஒரு இறையியல் வல்லுனராக இங்கே பரிணமிக்கிறான். இக்கருத்தை ரஷ்ய எழுத்தாளர் விளாடிமிர் சோலொவியேவ் "எதிர்க் கிறிஸ்து" என்ற சிறுகதையில் எடுத்தாழ்கிறார். எதிர்க்கிறிஸ்து பேர்பெற்ற ஒரு பல்கலைக் கழகத்திலிருந்து இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவராக இக்கதையில் வருகிறது. இக்கதையின் மூலம் சோலொவியேவ் அக்காலத்தில் நிலவிய ஒருவிதமாக திரிவுபட்ட விவிலிய விளக்கத்தைக் குறித்து மக்களை எச்சரிக்கிறார். இதில் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், விவிலிய நுண்ணாய்வு (exegesis), சாத்தானின் கருவியாகும் வாய்ப்பு இருக்கிறது. சோலொவியேவ் மட்டும் இதைச் சொல்லவில்லை; இயேசுவின் சோதனைகளின் கதையின் மூலக் கருத்தே இதுதான். விவிலிய குறைகாண் நுண்ணாய்விலிருந்து (exegesis) பெறப்பட்டதாகச் சொல்லப்படும் சில கருத்துக்களையே சிலர் திகில்ப்படுத்தும் புத்தகங்களில் எழுதப் பயன்படுத்துகிறார்கள். இயேசுவைப் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்யவும், விசுவாசத்தைக் குலைக்கவும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


தற்காலத்தில் விவிலியத்தை, உலகப் பார்வையுடன் ஒப்பிடுகிறார்கள். உலகப் பார்வை என்பதன் அடிப்படைக் கொள்கை "கடவுள் வரலாற்றில் இயங்கியிருக்க முடியாது" என்பது. ஆகவே, இதன்படி விவிலியம் கூறும் இறைவன் உயிருள்ள இறைவனல்ல என்றாகிறது. இறைவனால் என்ன செய்ய முடியும், நாம் என்ன செய்ய வேண்டும் என்று நாம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆகிறது. இவற்றுடன் "விவிலியத்தை விசுவாச நோக்கில், உயிருள்ள இறைவனின் வார்த்தையைக் கேட்கும் விதமாகச் செய்யப்படும் எந்த நுண்ணாய்வும் பழமைவாதமே" என்று சாத்தானாகிய எதிர்க்கிறிஸ்து, அவனது சிறப்புப் புலமையைக் கொண்டு சொல்கிறான். முற்றிலும் அறிவியல் முறை சார்ந்தது என்பதாகச் சொல்லப்படுகின்ற, இறைவன் எதுவும் சொல்லவில்லை - சொல்வதற்கும் இல்லை, எனக் கூறுகின்ற அவனது குறைகாணும் நுண்ணாய்வே சரியானது என்று நம்மை நம்ப வைக்கப் பார்க்கிறான்.


இரண்டாவது சோதனையில் இயேசுவுக்கும் சாத்தானுக்கும் இடையே நிகழும் சொற்போர், "விவிலியத்தின் சரியான விளக்கம் யாது ?" என்பதை குறித்தது. வரலாற்றின் எல்லாப் பக்கங்களுக்கும் இது பொருந்தும். இத்தர்க்கம் "இறைவன் யார் ?", "கிறிஸ்து உண்மையிலே இறைவனின் மகனா ?" ஆகிய கேள்விகளை நோக்கிச் செல்கிறது. இதற்கான பதில் இயேசுவின் பதிலாகக் கூறிய இணைச்சட்டம் 6:16 - லிருந்து வருகிறது. "மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்".

இஸ்ராயேலர் பாலைவனத்தில் தண்ணீரின்றி தாகத்துடன் தவித்தபோது, இறைவனுக்கு எதிராக முறையிட்டனர். இறைவன் தாம் இருக்கிறார் என அவராகவே நிரூபிக்க வேண்டும் (விடுதலைப்பயணம் 17:7) என்ற கோரிக்கையை விடுத்தனர். இறைவனை நமது ஆய்வுக்கூட சோதனைப் பொருளாக்கி, நாம் வேண்டும் இறைப்பாதுகாப்பைத் தருகிறாரா இல்லையா என்பதைப் பொறுத்து, அவர் இருக்கிறாரா இல்லையா என்று முடிவு செய்யும் முறையை இது குறிக்கிறது. இதுவே ஆணவம் எனப்படுவது. ஆணவத்தினால் உருவாக்கப்படும் சோதனைமுறைகளைக் கொண்டு இறைவனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது.


இயேசுவின் சோதனையின் போது அவர் ஆலய கோபுரத்தில் இருந்து பாதாளத்தில் குதித்து இறைவனை சோதனைப் பொருள் ஆக்கவில்லை. ஆனால் சிலுவை மரணத்தினால் சாவுப் பாதாளத்தில் குதித்தார். மனிதனின் மீதான கடவுளின் அன்பினால் இதனைச் செய்தார். இவ்வாறு சாவுப் பாதாளத்தில் இறங்கினால் தந்தையாம் இறைவனின் அன்புக்கரங்களில் தான் விழுவோம் என்பது அவருக்குத் தெரியும். சங்கீதம் 91 -ல் எழுதப்பட்டுள்ள இறைப்பாதுகாப்பு இங்கே வெளிப்படுகிறது. இறைவனின் விருப்பத்தை பின்பற்றினால், எத்தனை துன்பங்கள் வந்தாலும் இறுதியில் நல்லதோர் அடைக்கலம் கிடைத்தேயாகும் என இச்சங்கீதம் கூறுகின்றது. எவரும் உதவாத தருணங்களிலும், இறைவனின் மீதுள்ள நம்பிக்கையை வைத்து வாழ்க்கையை நாம் நடத்தலாம். விவிலியத்திலிருந்தும் ஆண்டவரின் உயிர்ப்பிலிருந்தும் பெறப்படும் இந்த இறை நம்பிக்கை, அவரை நமது சேவகனாக்கி சோதனைக்கு உட்படுத்திப் பார்க்கும் எண்ணத்தினின்று முற்றிலும் மாறுபட்டது.


நன்றி :-

அருள்வாக்கு http://www.arulvakku.com/biblecontent.php

Jesus of Nazareth by Pope Benedict XVI

கருத்துகள்

Robin இவ்வாறு கூறியுள்ளார்…
பொதுவாக கிறிஸ்தவத்தை குறைசொல்பவர்கள் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் சிலர் எழுதிய கட்டுகதைகளும் பைபிள்-இல் சொல்லப்பட்டதை வேண்டுமென்றே திரித்து சிலர் எழுதிய சில நூல்களுமே.
Robin இவ்வாறு கூறியுள்ளார்…
கிறிஸ்தவத்தின் இருண்ட காலம் என்றழைக்கப்பட்ட சமயத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும் அவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு.
சகாயராசன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாருங்கள் ராபின்,

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதன் பொருள்

பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய "நாசரேத்தூர் இயேசு" - புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 2

இயேசு சோதிக்கப்படல் - நாசரேத்தூர் இயேசு - பாகம் 3