கர்த்தர் அல்லது ஆண்டவர் என்பதன் பொருள்

தமிழ்க் கிறிஸ்தவ விவிலியங்கள் இறைவனை கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடுகின்றன. இவ்வாறு கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடப்படும் சொல், மூல மொழியான எபிரேயத்தில் יְהֹוָה என்று இறைவனைக் குறிக்கும் நான்கெழுத்து வார்த்தையாகும். இதுவே ஆங்கிலத்தில் YHWH எனக் குறிக்கப்படுகிறது. யூத வழக்கப்படி இறைவனின் நாமம் உச்சரிக்கப்படலாகாது. நம்மூரில் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக நேரடியாக பெயரைச் சொல்லாமல் உறவுமுறையைச் சொல்லி அழைக்கும் வழக்கம் நாம் அறிந்ததே. தமிழ்நாட்டில் எட்டயபுரம் என்ற இடத்தை முன்பு ஆண்டுவந்த எட்டப்ப மகாராஜாவுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக, அவ்வூரில் எண்களின் பெயரையே மாற்றினர் என்பர். 'ஏழு' (7) - க்குப் பிறகு 'எட்டு' (8) என்று சொல்லாமல் 'மகாராஜா' என்று சொல்லி பின்னர் 'ஒன்பது' எண்ணப்பட்டது. இதுபோலவே, அகில பரமண்டலங்களையும் உருவாக்கி ஆண்டுவரும் இறைவனை மதிப்பின் காரணமாக நேரடியாகப் பெயரிட்டு அழைக்காமல் "அடோனை" (பிரபு, ஆண்டவர் அல்லது கர்த்தர்) என்று அழைத்தனர். இதனால்தான் தமிழ் விவிலியங்களில் இறைவனை ஆண்டவர் அல்லது கர்த்தர் என்று குறிப்பிடுகின்றனர்.

திருநாம உச்சரிப்பு

லேவியர் ஆகமம் 24:16 "ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார்: சபையார் கல்லாலெறிவர். அன்னியரோ, நாட்டினரோ, யார் எனினும் திருப்பெயரை இகழ்கிறவர் கொல்லப்படுவார்" என்று சொல்வதால், சட்டப்புத்தகங்கள் கிரேக்க மொழிக்கு மொழிபெயர்த்த காலத்தில் திருநாம உச்சரிப்பு தடைசெய்யப்பட்டது என சில மறைநூல் அறிஞர்கள் கூறுவர். இறைவனின் உண்மையான திருநாமம் வெளிப்படையாக உச்சரிக்கப்படுவது நீதிமானான சிமியோனின் காலத்திலேயே வழக்கொழிந்துவிட்டது. யூத மறைநூல் அறிஞர் மெய்மனைட்ஸ், சிமியோன் பேரரசரான மகா அலெக்ஸாண்டரின் காலத்தவர் என்கிறார். யெருசலேம் தேவாலயத்தின் கருவறையில் பணியாற்றிய ஆசீர் அளிக்கும் பூசாரிகளும், கோயில் தலைமைப் பூசாரியும் (யோம் கிப்புர் அல்லது கழுவாய் திருநாளின்போது) மட்டுமே திருநாமத்தை உச்சரிக்க அனுமதிக்கப்பட்டனர். தேவாலயம் இடிக்கப்பட்டபின் திருநாமம் உச்சரிக்கப்படவில்லை.

எபிரேய மொழிப்பிரதிகளில் இறைவனின் பெயர் நான்கு மெய்யெழுத்துக்களால் எழுதப்பட்டு அடோனை (ஆண்டவர்) என்று வாசிக்கப்படவேண்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (இதைத் தவிர, சில பிரதிகளில், 'அடோனை' என்பதற்குப் பதிலாக 'ஹஷெம்' ('திருநாமம்') என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது). மெசோரட்டுகள் எனும் மறைநூல் எழுதுவோரால் இம்முறை கையாளப்பட்டது. இத்திருப்பெயரின் நான்கு மெய்யெழுத்துக்களையும், அடோனையில் உள்ள உயிரெழுத்துக்களையும் இணைத்தால் கிடைப்பது இறைவனின் திருப்பெயர் என்பது பொதுவான கருத்து. அதன்படி நாம் செய்தால் பெறுவது "யெஹோவா" என்ற இறைநாமம். ஆனால் இன்னும் சில இடங்களில் திருநாமத்தின் நான்கெழுத்து வார்த்தையுடன் அடோனையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களில் திருப்பெயர் "ஏலோஹிம்" என்று வாசிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்போல, திருப்பெயரின் நான்கு மெய்யெழுத்துக்களையும் ஏலோஹிமில் உள்ள உயிரெழுத்துக்களையும் இணைத்தால் கிடைப்பது "யெஹோவி". ஆகவே, 'எவை உண்மையாகவே திருப்பெயரைப் பெறுவதற்கான உயிரெழுத்துக்கள் ?' என்ற கேள்வி எழுகிறது. இதற்குச் சரியான விடை இருக்கிறதென்று இதுவரை எவரும் நிரூபிக்கவில்லை. வரலாற்றில் பலரும் இறைவனின் திருநாமத்தை எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்று ஒப்பிட்டு நோக்கி, சமாரியர்கள் இறைவன் பெயரைக்குறிக்கும் "ஜாபே" எனும் சொல் கிட்டத்தட்ட இறைநாமத்தை போன்றுள்ளது என கத்தோலிக்க கலைக்களஞ்சியம் கூறுகிறது. "ஜாபே"-யின் உயிரெழுத்துக்களை நான்கெழுத்து வார்த்தையுடன் சேர்த்தால் கிடைக்கும் "யாவே" என்பதே பொதுவாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும் இறைத்திருநாமம்.

திருநாமத்தின் பொருள்

இறைவனின் திருநாமமான "யாவே", எபிரேய மொழியில் "இருக்கிறவர்" (The Being) அல்லது "வாழ்கிறவர்" என்று பொருள்படும். இணைச்சட்டம் 3:6-16 -ல் மோசே இறைவனிடம் அவரது பெயரைக்குறித்து வினவுவதைக் குறிப்பிடுகின்றது. மோசே கடவுளிடம், ″ ″ இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, அவர் பெயர் என்ன? என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?″ ″ என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ″ ″ நீ இஸ்ரயேல் மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்″ ″ என்றார். எபிரேய மொழியில் ஆண்டவர் "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்று சொல்வதை "எஹ்யே அஷெர் எஹ்யே" எனக் குறிக்கப்பட்டுள்ளது. சிலர் இதையே இறைவனின் திருப்பெயராக எடுத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர். "எஹ்யே அஷெர் எஹ்யே" என்றால் முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இன்னும் இருக்கப்போகும் ஒருவர் என்று பொருள்படும் என சில இறையறிஞர்கள் கூறுகின்றனர். இறைவன் முக்காலமும் கடந்தவராகையால் இது அவரைக் குறிக்கும் சரியான பெயரே.

நன்றி :- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் http://www.newadvent.org/cathen/
அருள்வாக்கு http://www.arulvakku.com/biblecontent.php
விகிபீடியா http://en.wikipedia.org

கருத்துகள்

கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
/ "எஹ்யே அஷெர் எஹ்யே" என்றால் முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இன்னும் இருக்கப்போகும் ஒருவர் என்று பொருள்படும் என சில இறையறிஞர்கள் கூறுகின்றனர். இறைவன் முக்காலமும் கடந்தவராகையால் இது அவரைக் குறிக்கும் சரியான பெயரே//

நல்ல விளக்கம் !
மேலும் எட்டயபுர வழக்கெல்லாம் குறிப்பிட்டு நன்றாக எழுதியுள்ளீர்கள்.
சகாயராசன் இவ்வாறு கூறியுள்ளார்…
கோவி.,

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய "நாசரேத்தூர் இயேசு" - புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 2

இயேசு சோதிக்கப்படல் - நாசரேத்தூர் இயேசு - பாகம் 3