நாசரேத்தூர் இயேசு - பாப்பரசர் பெனடிக்ட் XVI எழுதிய புத்தகம் பற்றிய சில குறிப்புகள் - பாகம் - 1
பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் எழுதிய "நாசரேத்தூர் இயேசு" என்ற புத்தகத்தை சமீபத்திலே வாசித்தேன். ஒருவிதமான விசுவாசத்தைப் பற்றிய தளர்ச்சியிலும், சுய முரண்பாட்டிலும் குழப்பத்திலும் சிக்கித்தவிக்கும் கத்தோலிக்க மனங்களுக்கு இப்புத்தகம் அருமருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. விவிலிய வசனங்களுக்கு நாத்திகப் பாணியில் விளக்கம் கொடுத்து ஊரை எமாற்றும் சில இறையியல் வல்லுனர்களை அடையாளம் காணவும் இப்புத்தகம் நிச்சயமாக உதவும் .
இனி, இந்த புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தில் பாப்பரசர் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
இனி, இந்த புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தில் பாப்பரசர் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
- பழைய ஏற்பாட்டின் இணைச் சட்ட ஆகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் உறுதிமொழிக்கும் யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவுக்கும் என்ன வித்தியாசம் என்பதை சுட்டிக் காட்டுகிறார். இணைச் சட்டம் 18:15 வசனத்தில் சொல்லப்பத்திருப்பது உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஒரு இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஆகவே வாக்களிக்கப்பட்டவர் ஒரு புதிய தாவீது (இஸ்ரயேலின் அரசர்) அல்லர்; மாறாக அவர் ஒரு புதிய மோசே (இறைவாக்கினர்).
- இறைவாக்கினர் என்பவர் யார் ? வருங்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே சொல்லும் குறிசொல்பவர் இஸ்ரயேலின் இறைவாக்கினர் அல்லர். ஏனெனில் குறிசொல்பவர்களைப் பற்றி பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது (இணைச் சட்டம் 18:9-12):உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டுக்குள் போனபின், அந்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்களைக் கற்றுக் கொள்ளாதே. தன் புதல்வன் அல்லது புதல்வியைத் தீ மிதிக்கச் செய்கிறவனும், குறி சொல்கிறவனும், நாள் பார்க்கிறவனும், சகுனங்களை நம்புகிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், ஏவிவிடுகிறவனும், மாயவித்தைக்காரனும், இறந்தவர்களிடம் குறிகேட்கிறவனும் உங்களிடையே இருத்தலாகாது. ஏனெனில், இவற்றையெல்லம் செய்கிறவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களின் நிமித்தம் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் முன்னிலையினின்று அவனைத் துரத்திவிடுவார்.
- வாக்களிக்கப்பட்ட இறைவாக்கினர் மோசேயைப் போல கடவுளை முகம் முகமாய்த் தரிசித்து (இணைச் சட்டம் 34:10) விசுவாச வழியில் நடப்பவர்; ஒரு மனிதன் தன் நண்பனுடன் பேசுவது போல கடவுளுடன் பேசுபவர்.
- ஆகவே இவ்வாறு வாக்களிக்கப்பட்ட இறைவாக்கினர் அந்நாளில் இறைவாக்கினர் என கருதப்பட்டவர்கள் தங்களைப் பற்றி நினைத்துக்கொண்டதுபோல ஒரு இஸ்ரேலியப் பாணி குறிசொல்பவர் அல்லர். அவர் பணி மனித மனங்களின் பாதுகாப்பு உணர்விற்காகவோ அல்லது விநோத பிரியத்திற்காகவோ, நாளை அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று எடுத்துச் சொல்வது அல்ல. மாறாக அவர் நமக்கு கடவுளின் முகத்தைக் காட்டுகிறார்; அவ்வாறு செய்கையில் நாம் எந்தப் பாதையை தெரிவு செய்ய வேண்டும் என்பதையும் காட்டுகிறார். அவர் காட்டும் எதிர்காலம், ஒரு குறி சொல்பவரிடம் மக்கள் எதிபார்க்கும் எதிர்காலத்தைக் காட்டிலும் வெகுதொலைவு தாண்டிய காலம். அவர் உண்மையான விடுதலைப் பயணத்திற்கான (Exodus) பாதையைக் காட்டுகிறார். வரலாற்றின் மற்றெல்லாப் பாதைகளை விடவும், கடவுளை நோக்கிச் செல்லும் இப்பாதையே உண்மையானது; நாம் தேடிக் கண்டுபிடித்துச் செல்ல வேண்டியது.
- விடுதலைபயணம் 33:18-23 -ல் கூறப்பட்டுள்ளபடி பார்க்கும் போது, மோசேயை வெளிப்படுத்துதலின் நடுவராகவும், உடன்படிக்கையின் நடுவராகவும் கடவுள் ஏற்பாடு செய்திருந்தாலும், கடவுளுக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவு ஒரு கட்டுக்குள் நிற்கிறது. கடவுளின் பிரசன்னம் இருக்கும் இடத்திற்குள் சென்று ஒரு நண்பரைப் போல ஆண்டவரிடம் பேச முடிந்தாலும், கடவுளின் முகத்தை மோசேயால் காண முடியவில்லை. "என்னைப் போன்ற ஒரு இறைவாக்கினர்" என சொல்லப்பட்ட உறுதிமொழியில், இறுதி இறைவாக்கினருக்கு (மோசே வுக்கு மறுக்கப்பட்ட) கடவுளின் முகத்தைக் காணும் பேறும், மோசே சினாய் மலையிலிருந்து கொண்டுவந்த உடன்படிக்கையைக் காட்டிலும் மேலானதொரு உடன்படிக்கையின் நடுவராகும் பேறும் கிடைக்கும் என்பது மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
- இதனை மனத்தில் இருத்திக்கொண்டு, யோவான் 1:18 வாசிப்போம் : கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் இதயத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே இயேசுவில் புதிய இறைவாக்கினருக்கான உறுதிமொழி நிறைவேறுகிறது.
- இதன் அடிப்படையில், புதிய ஏற்பாட்டினை வாசிக்கும் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய "இயேசுவின் கற்பனைகள் (Teachings) எங்கிருந்து வந்தன; வரலாற்றில் அவரது தோற்றம் எவ்வாறு விளக்கப்பட வேண்டும்" எனும் கேள்விக்கு உண்மையாக விடை அளிக்க முடியும்.
- இயேசுவின் கற்பனைகள் மனிதக் கல்வியினால் உருவானதல்ல. அது தந்தையாம் கடவுளிடம் உள்ள தொடர்பிலிருந்து, நேருக்குநேரான பேச்சிலிருந்து உருவாகிறது. இதை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் இயேசுவின் கற்பனைகள் வெறும் ஊகத்தின் அடிப்படையிலானவை எனக் கொள்ளவேண்டியிருக்கும். இயேசுவின் காலத்திலிருந்த கல்விமான்கள் இப்படித்தான் நினைத்தனர். ஏனென்றால் கடவுளோடு நேருக்குநேராகப் பேசுவது, அறிவது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
- நற்செய்தி நூல்கள் மீண்டும் மீண்டும் இயேசு மலைக்குச் சென்று தந்தையுடன் தனியாக இரவு முழுவதும் செபம் செய்தார் என்று கூறுகின்றன. இப்பகுதிகள் இயேசுவைப்பற்றி அறிவதற்கு இன்றியமையாதவை; இவை இயேசுவின் செயல்கள், கற்பனைகள் மற்றும் துன்பங்கள் ஆகியவை எங்கிருந்து உருவானவை என்று காட்டுகின்றன.
- யோவான் 14-9 : இயேசுவைக் காண்கிறவன் (கடவுளாம்) தந்தையைக் காண்கிறான். இயேசுவுடன் நடக்கும் சீடன் அவருடன் மேலே எடுக்கப்பட்டு கடவுளுடன் பந்தியில் அமர்கிறான். இதுவே மீட்பு என்பது.
கருத்துகள்